தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் அவமதித்த விஜயேந்திரர்..கொந்தளித்த தமிழ் ஆர்வலர்கள்

  • 6 years ago
சென்னையில் நூல் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இதில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்தார். விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.

விஜயேந்திரரின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. தமிழ்தாய் வாழ்த்து என்ன அவ்வளவு அவமானமானதா என அங்கிருந்த தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்தனர். தமிழை அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விஜயேந்திரரின் இந்த செயல் குறித்து #TamilInsulted என்ற ஹேஸ்டேக் போட்டு ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமஸ்கிருதம் உங்களுக்கு தேவ மொழி என்றால் தமிழ் எங்களுக்கு தாய் மொழி தெய்வத்தை விட இங்கு தாய் பெரியவள் ; தாயை போன்று எங்கள் மொழியும் வணங்கப்படவேண்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த செயல் கடும் கண்டனத்திற்குறியது என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். விஜயேந்திரரின் செயல் குறித்து அங்கிருந்த எச். ராஜாவிடம் கருத்து கேட்ட போது அவர் கருத்து கூறாமல் சென்றுவிட்டாராம்.


Vijayendra Saraswathi insulting Tamil Thaai Vazhthu by refusing to stand in a book function.

Recommended