கோடியக்கரையில் குவிந்த பறவைகள் அழகிய காட்சி- வீடியோ

  • 6 years ago
நாகை அருகே உள்ள சதுப்பு நில காடுகளில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குஷியில் உள்ளனர். இதனால் அங்கு பார்வையாளர்கள் வரத்து அதிகரித்து உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பசுமை மாறாக் காடுகளும், சதுப்பு நிலங்களும் அமைந்துள்ளது. இந்த காடு 36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காட்டில் மூலிகை வனமும் உள்ளது. மேலும் இந்த காட்டில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் வெள்ளிமான், புள்ளிமான், குரங்கு, முயல், காட்டுப்பன்றி, நரி முதலிய விலங்குகள் உள்ளன. பறவைகள் சரணாலயத்தில் வெளிநாடு மற்றும் உள்நாடு வகையைச் சேர்ந்த 256 வகையான பறவை இனங்களும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இங்கு வந்து தங்கி சதுப்பு நிலத்தில் உள்ள புழு, பூச்சிகளை உண்டு, இன விருத்தி செய்து இங்கிருந்து தங்கள் சொந்த வாழிடங்களுக்கு திரும்புகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வேதாரண்யம் பகுதியில் சரியாக பருவமழை பெய்யாததால் காட்டு பகுதியில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. இந்தாண்டு வேதாரண்யம் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து குவிய தொடங்கி உள்ளன. ஈரான், ஈராக், சைபீரியா, காஸ்பியன் கடற்பகுதியில் இருந்து பிளமிங்கோ என்று அழைக்கப்படும் பூ நாரைகள் வந்துள்ளன. இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக வனத்துறை பல்வேறு வசதிகளை செய் துள்ளனர். பல ஆண்டுகளாக பறவைகள் வரத்து இல்லாததால், வருத்தமடைந்து இருந்த சுற்றுலா பயணிகள் இந்த முறை அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறியதாவது, சரணாலயத்துக்கு வந்து குவிந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவை இனங்களை சுற்றுலா பயணிகள் , காட்டு பகுதியில் உள்ள பம்ப் ஹவுஸ், இரட்டை தீவு, கோவை தீவு, மணவாய்க்கால் மற்றும் கடற்கரை பகுதிகளில் பார்த்து மகிழலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Nagappatinam Marshland Area and Kodiyakkarai sanctuaries with foreign Birds . This year Birds from various Countries came for Breeding purpose and lot of tourists are attracted by the Birds.

Recommended